Paristamil Navigation Paristamil advert login

இரு ஆண்டில் ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்

இரு ஆண்டில் ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை:  ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்

28 கார்த்திகை 2023 செவ்வாய் 12:41 | பார்வைகள் : 1609


சட்டவிரோதமாக மணல் அள்ளியதன் வாயிலாக, 4,730 கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளை அடிக்கப்பட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் அளித்துஉள்ளது.

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் ஐந்து மாவட்ட கலெக்டர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, அமலாக்கத் துறை உதவி இயக்குனர் மஞ்சுநாதன் சார்பில், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:

சட்டவிரோத பண பரிமாற்ற குற்றத்துக்கான விசாரணையை முறியடிக்க, மாநில அரசு முயற்சிக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன; விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்.

சம்மன் அனுப்பப்பட்டவர்களுக்கு, அதை அமல்படுத்தும் கடமை உள்ளது; விபரங்களை வழங்க வேண்டும். விசாரணையை தடுப்பதும், உண்மையான பயனாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதை தடுப்பதும் தான், இந்த வழக்கின் நோக்கம். 

அரசை ஏமாற்றியவர்களை பாதுகாக்கும் விதத்தில், அரசே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத் துறைக்கு உதவுவதற்கு பதில், விசாரணைக்கு முட்டுக்கட்டை போட, அரசு முயற்சிக்கிறது. ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவது, அரசுக்கு எதிரானது அல்ல. சட்டவிரோதமாக மணல் அள்ளியது; அதன் வாயிலாக கிடைத்த வருவாய் தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரம், அமலாக்கத் துறை வசம் உள்ளது. 

விசாரணையின் போது, தங்களை உயர் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் துன்புறுத்தியதாகவும், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூடாது என கூறியதாகவும், அரசு அதிகாரிகள் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டப்படி, தேவைப்படும் நபர் யாராக இருந்தாலும், அவரை வரவழைக்க அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள், நேரடியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்ட் வாயிலாகவோ ஆஜராக வேண்டும். மாவட்ட கலெக்டர்களிடம் விசாரிக்கவே, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  

சம்மனுக்கு தடை விதித்தால், புலன் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும். சட்டவிரோதமாக மணல் அள்ளியதன் வாயிலாக, 4,500 கோடி ரூபாய்க்கு மேல் ஆதாயம் கிடைத்திருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது, 28 இடங்களில் மணல் அள்ள, நீர்வளத் துறை அனுமதி வழங்கி உள்ளது. 

கான்பூர் ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு, 28 இடங்களிலும் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தி, எந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது; எவ்வளவு அள்ளப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ளது.

இந்த, 28 இடங்களிலும், 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது; ஆனால், 2,450 ஏக்கருக்கு மேல் மணல் அள்ளப்பட்டுள்ளது. 

நீர்வளத்துறை பதிவேட்டில், 4.05 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 27.70 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. அதாவது, 24 லட்சம் யூனிட் அதிகமாக அள்ளப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டவிரோதமாக அள்ளப்பட்ட கூடுதல் மணல் விற்பனையின் மதிப்பு, 4.730 கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது. ஆவணங்களில், 36.45 கோடி ரூபாய் வருவாய் என்று காட்டப்பட்டுள்ளது. இது, ஒரு சதவீதத்துக்கும் குறைவு. 

இந்த குற்றத்தின் வாயிலாக கிடைத்த மொத்த ஆதாயம், 4,730 கோடி ரூபாய். இந்த அளவுக்கு பொது மக்கள் மற்றும் அரசின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மணல் அள்ளவும் விற்கவும், நீர்வளத் துறைக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் வாயிலாக, மணல் மாபியா, அரசு ஊழியர்கள், பயனாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

அமலாக்கத் துறை விசாரணையின் போது, நீர்வளத் துறை அதிகாரிகள், பொறியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் பாதுகாப்பு கருதி, பெயர்களை வெளியிடவில்லை. 

உயர் அதிகாரிகள், பொறியாளர்களின் வாக்குமூலங்களில் இருந்து, சட்டவிரோதமாக கூடுதல் மணல் அள்ளப்பட்டிருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

மணல் குவாரியை கண்காணிப்பது, சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுப்பது, அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக மணல் அள்ளியதன் வாயிலாக, பண பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டிய கடமை, அமலாக்கத் துறைக்கு உள்ளது. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் உதவியாளர் அளித்த நிர்ப்பந்தம்!

அமலாக்கத் துறையிடம் அதிகாரி ஒருவர் அளித்த வாக்குமூலம்: அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக, தனியார் ஒப்பந்ததாரர்கள் மணல் அள்ளினர். 

சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க, நீர்வளத் துறை அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

நிர்வாக பொறியாளர் பொதுப்பணித்திலகம், என்னை தலைமை செயலகத்தில் சந்தித்து, விடுமுறை நாட்களில் வீட்டில் தங்க வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகனும், செயலர் சந்தீப் சக்சேனாவும் விரும்புவதாக தெரிவித்தார்; மொபைல் போனை அணைத்து வைக்கவும் கூறினர். 

மனைவியுடன் வீட்டை விட்டு சென்றேன்.எனக்கு, அமலாக்கத் துறையிடம் இருந்து சம்மன் வந்ததை, செயலர் சந்தீப் சக்சேனாவிடம் தெரிவித்தேன். 

பின், பொதுப்பணித்திலகத்திடம் இருந்து அழைப்பு வந்தது. சம்மனுக்கு அவகாசம் கேட்க துரைமுருகன் விரும்புவதாக, என்னிடம் தெரிவித்தார். மற்றொரு சம்மன் வந்தபோது, நீர்வளத்துறை அமைச்சரின் உதவியாளர் உமாபதி என்னை அழைத்து, ஆஜராக வேண்டாம் என, மறைமுகமாக கூறினார். ஆனால், நான் ஆஜராக போவதாக தெரிவித்தேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்