புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்!
1 கார்த்திகை 2023 புதன் 07:03 | பார்வைகள் : 6236
இன்று நவம்பர் 1 ஆம் திகதி, இந்த புதிய மாதத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
வாடகை வீடு சட்டம்!
வாடகை வீட்டில் வசிப்பர்களை அதன் உரிமையாளர்கள் ‘வாடகைப் பணம் செலுத்தவில்லை என்பதைக் காரணம் காட்டி’ வெளியேற்ற முடியாது. trêve hivernale என அழைக்கப்படும் இந்த சட்டம் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வரும் மார்ச் 31, 2024 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
எவ்வாறாக இருந்தாலும், குடும்ப வன்முறை உள்ளிட்ட காரணங்களுக்காக நீதிமன்ற உத்தரவு மூலம் வாடகைக்கு வசிப்பவர்களை வெளியேற்ற முடியும்.
எரிவாயு விலையேற்றம்!
இன்று முதல் எரிவாயுக்கட்டணம் சிறிய அளவில் அதிகரிக்க உள்ளது. எரிவாயு மற்றும் மின்சாரக்கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், மீண்டும் இன்று முதல் எரிவாயு விலையேற்றம் காண்கிறது. ஒரு கிலோவாட் மணிநேரத்தின் எரிவாயு விலை 0.12077 யூரோக்களாக அதிகரித்துள்ளது.
வாகனங்களுக்கான சக்கரங்கள்!
வாகனங்களுக்கான பனிக்கால டயர்கள் (PNEUS ) மாற்றவேண்டிய கட்டாயம் இன்று முதல் சில மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மலைகள் அதிகம் உள்ள 34 மாவட்டங்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கள் வாகங்களுக்குரிய டயர்களை, குளிர்காலத்துக்கான டயர்களாக மாற்றப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மார்ச் 31, 2024 ஆம் ஆண்டு வரை இந்த டயர்கள் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்)
மேலதிக ஓய்வூதியம்!
இன்று நவம்பர் 1 ஆம் திகதி, 13 மில்லியன் பேர் தங்களது ஓய்வூதிய தொகையில் சிறிய அளவு மேலதிக கொடுப்பனவு ஒன்றை பெற்றுக்கொள்ள உள்ளனர். தனியார் துறையின் முன்னாள் ஊழியர்களுக்கு இந்த மேலதிக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, அவர்களுக்கான ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 4.9% சதவீத தொகை வழங்கப்படும். பணவீக்கம் காரணமாக இந்த தொகை வழங்கப்பட உள்ளது.
மருத்துவ ஆலோசனைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!
இன்று முதல் மருத்துவ ஆலோசனைகளுக்கான கட்டணம் 1.50 யூரோக்களால் அதிகரிக்கப்படுகிறது. புதிய கட்டணமாக 26.50 யூரோக்களாக கட்டணம் அறவிடப்பட உள்ளது.