சியாரா புயல் - இல் து பிரான்சுக்குள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பூங்கா, தோட்டங்கள் மூடப்படுகிறது!!
1 கார்த்திகை 2023 புதன் 10:30 | பார்வைகள் : 5649
பிரான்சின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளை கடந்த இரு நாட்களாக பீடித்திருந்த சியாரா புயல் (Tempete Ciaran) இன்று புதன்கிழமை நள்ளிரவு கரையக் கடக்கிறது.
மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. அதையடுத்து இல் து பிரான்சின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பொது இடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sevran நகரில் உள்ள பூங்காக்கள், புல்வெளி பகுதிகள், கல்லறைகள் மூடப்படுகிறது. அங்கு வெளிப்புற விளையாட்டுக்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள Petit-le-Roy, Morbras, Rancy, Roseraie, Cormaille மற்றும் Bordes பூங்காக்கள் மாலை 4 மணி முதல் மூடப்படுகிறது.
Essonne, Seine-Saint-Denis மற்றும் Hauts-de-Seine மாவட்டங்களில் உள்ள பொது இடங்களும் மூடப்படுகிறது. இன்று மாலையில் மூடப்படும் இந்த பொது இடங்கள், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் எனவும், சில இடங்கள் மட்டும் நாளை மாலையே மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தலைநகர் பரிசில் குறிப்பிடத்தக்க அளவு ஆபத்துக்கள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசில் பொது இடங்கள் எதுவும் மூடப்பட உள்ளதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.