மேற்கு பிரான்சை சூறையாடிய சியாரா புயல்! - மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பதிவு!
2 கார்த்திகை 2023 வியாழன் 06:00 | பார்வைகள் : 6576
சியாரா என பெயரிடப்பட்ட பெரும் புயல் ஒன்று நேற்று நள்ளிரவு மேற்கு பிரான்சை சூறையாடிச் சென்றது. பெரும் சேதங்களை ஏற்படுத்திச் சென்ற இந்த புயல், மணிக்கு 190 கி.மீ வேகத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை!
நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களுக்கு (Finistère, Côtes-d'Armor மற்றும் Manche) சிவப்பு எச்சரிக்கையும், தலைநகர் பரிஸ், இல் து பிரான்சின் ஒரு பகுதி உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மக்ரோன் கோரிக்கை!
“வீட்டில் இருங்கள்!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று இரவு தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார். ”அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். எந்த ஆபத்தான செயல்களும் மேற்கொள்ளவேண்டாம்!” என மக்ரோன் குறிப்பிட்டார்.
அதிகபட்ச புயல்!
இன்று அதிகாலை 4 மணி அளவில் Finistère மவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச புயல் வேகம் பதிவானது. குறிப்பாக Pointe du Raz நகரில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் புயல் பதிவானது. ஏனைய இடங்களில் மணிக்கு 193 கி.மீ வேகத்தில் புயல் பதிவானது.
கடல்நீர் மட்டம் அதிகரிப்பு!
புயல் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. Ille-et-Vilaine பகுதி தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது. அங்கு வழமைக்கு மாறாக கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. அதேவேளை, கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.