சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட்!
2 கார்த்திகை 2023 வியாழன் 12:33 | பார்வைகள் : 2853
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்த ஆண்டில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்த 03 ஆவது இந்திய வீரராக விராட் கோஹ்லி பதிவாகியுள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களான ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்திருந்தனர்.
இதனைத் தவிர இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஷ்ஷங்கவும் இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரராக பதிவாகியுள்ளார்.
இலங்கை அணிக்கெதிராக இன்று நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆயிரம் ஓட்டங்களை விராட் கோஹ்லி கடந்துள்ளார்.
விராட் கோஹ்லி இந்த ஆண்டு தனது 23 ஆவது போட்டியில் 1000 ஓட்டங்களை எட்டினார்.
34 வயதான விராட் கோஹ்லி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக தடவைகள் 1000 ஓட்டங்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டியதன் மூலம், தொழில்முறை கிரிக்கெட்டில் எட்டாவது முறையாக ஆண்டு ஒன்றில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இலங்கைக்கு எதிராக நடைபெறும் உலக கிண்ண போட்டியில் இந்த வரலாற்று மைல்கல்லை அடைய கோஹ்லிக்கு வெறும் 34 ஓட்டங்களே தேவைப்பட்டது.
எனினும் தனது நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் இந்த மைல் கல்லை எட்டிய விராட் கோஹ்லி, 94 பந்துகளில் 11 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை பெற்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை விராட் கோஹ்லி தவறவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார மற்றும் ரிக்கி பொண்டிங் போன்ற ஜாம்பவான்களுக்குப் பின்னர், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 26,000 ஓட்டங்களை எட்டிய நான்காவது துடுப்பாட்டவீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
கடந்த 15 ஆண்டுகளாக இந்திய துடுப்பாட்ட வரிசையில் முதுகெலும்பாக இருந்துவரும் விராட் கோஹ்லியின் இந்த சாதனையானது, கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.