மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை
4 கார்த்திகை 2023 சனி 07:07 | பார்வைகள் : 2918
தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில், மணல் கொள்ளையை தடுக்க சென்ற வி.ஏ.ஓ., மீது, மணல் கொள்ளையர்கள், கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வேலுார், பொன்னையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர் உமாபதியை, சமூக விரோதிகள் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
தங்கள் கடமையை செய்யும் அரசு அதிகாரிகள் மீதும், தமிழகம் முழுதும் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்கிறது.
அதிகாரிகளை அவர்களது அலுவலகத்திலேயே கொலை செய்வதும், கலெக்டர் அலுவலகத்தில் கூட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும், மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதை தடுக்க கையாலாகாமல் இருக்கிறது ஊழல் தி.மு.க., அரசு.
அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் உயிர் பாதுகாப்பு இல்லையென்றால், தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவரின் மற்றொரு அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சகோதரர் இருவர் மீது, ஜாதியை கேட்டு ஒரு கும்பல் கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதோடு, இருவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து, மனித தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர்களை, தமிழக பா.ஜ., சார்பில் கண்டிக்கிறோம்.
ஜாதிய ரீதியிலான குற்றங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்துவதும், பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அரசின் கடமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.