நீட் விலக்கு: தமிழக காங்., தலைவர் அழகிரியிடம் கையெழுத்து வாங்கினார் உதயநிதி
4 கார்த்திகை 2023 சனி 10:10 | பார்வைகள் : 2859
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விலக்கு கோரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம், அமைச்சர் உதயநிதி நேற்று கையெழுத்து வாங்கினார்.
தி.மு.க., மருத்துவ அணி சார்பில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த மாதம் 21ல் கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது. இந்த இயக்கத்தை துவக்கி வைத்த முதல்வர்ஸ்டாலினும், தன் கையெழுத்தை முதலில் பதிவு செய்தார்.
மேலும், 50 நாட்களில், 50 லட்சம் கையெழுத்துகளை பெறும் வகையில், இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அங்கிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் கையெழுத்து பெற்றார். அவரை தொடர்ந்து தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், விஜய் வசந்த் உள்ளிட்டோரிடமும் கையெழுத்து வாங்கினார்.
பின், அமைச்சர் உதயநிதி கூறியதாவது: நீட் தேர்வை ரத்து செய்வதற்காக, தி.மு.க., அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை மூன்று லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். தபால் அட்டைகள் வாயிலாக எட்டு லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.
கூட்டணி கட்சித் தலைவர்களிடமும் கையெழுத்து வாங்கி வருகிறோம். இது, தி.மு.க., பிரச்னை; இளைஞர் அணி பிரச்னை கிடையாது. இது, ஒட்டுமொத்தமான மாணவர்களின் உரிமை. அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து, கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்த இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அழகிரி கூறியதாவது: இந்த கையெழுத்து இயக்கத்தை, மக்கள் இயக்கமாக பார்க்கிறேன்; இது வெற்றி பெறும். வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டது போல், நீட் தேர்வும் திரும்ப பெறப்படும். உதயநிதியை தமிழக காங்கிரஸ் பாராட்டுகிறது.
தி.மு.க., அரசுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுக்க முடியுமோ கொடுங்கள் என, கவர்னருக்கு சொல்லி அனுப்பியுள்ளனர். உச்ச நீதிமன்றம் கவர்னருக்கும், மத்திய அரசுக்கும் 'குட்டு' வைக்கப் போகிறது. அதன் பின், அவர்கள் கண்கள் திறப்பர். மதுரை பல்கலை பட்டமளிப்பு விழாவை முன்னரே, அமைச்சர் பொன்முடி புறக்கணித்து இருக்க வேண்டும். இது தாமதமான முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி தொடரும்: அமைச்சர் மகேஷ்
தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழகத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இருப்பினும், அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், சிறப்பு பயிற்சி நடைபெறும். அரசு பள்ளி மாணவர்களால் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, தனியாரிடம் பயிற்சி பெற முடியாது. மாணவர்களின் நிதிச் சுமையை குறைக்க, பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இது தொடர்பாக, பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை என நீதிமன்றமே கூறியுள்ளது. அரசு தங்களது கருத்துகளை இது போன்று வெளிப்படுத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.