Paristamil Navigation Paristamil advert login

சீரற்ற காலநிலை - இலங்கையின் 08 மாவட்டங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை - இலங்கையின் 08 மாவட்டங்கள் பாதிப்பு

6 கார்த்திகை 2023 திங்கள் 10:25 | பார்வைகள் : 2689


சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 08 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சுமார் ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், மரணமொன்றும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிதுனுவெவ பிரதேசத்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த 35 வயதுடைய ஒருவரே மின்னல் தாக்கம் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவுகள் காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியின் ஹல்துமுல்ல - பத்கொட பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த பகுதிக்கு சென்று முன்னெடுத்த பரிசோதனையின் பின்னர், அந்த பகுதியில் ஒரு வழி போக்குவரத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்தார்.

இதேவேளை, அத்தனகலு ஓயாவின் துனமல பகுதியில் சிறு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நில்வளா கங்கையின் நீர்மட்டம் தலகஹகொட, பனடுகம பிரதேசங்களில் அதிகரித்துள்ளதால் குறித்த பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மொரகட்டிய பிரதேசத்தில் வலவை கங்கை பெருக்கெடுத்துள்ளதால் சிறு வெள்ள பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தின் ஹத்படுனாஓய பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்