காஸாவில் பரிதாபமாக பலியாகும் குழந்தைகள் - ஐ.நா பொதுச் செயலாளர் கவலை
7 கார்த்திகை 2023 செவ்வாய் 06:22 | பார்வைகள் : 3684
இஸ்ரேல் காசா நகர் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் காசா நகர் பொது மக்கள் பாரிய துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மையானதாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
காஸா பகுதி குழந்தைகளின் கல்லறையாக மாறி வருகிறது.
இந்த கொடூரமான, பயங்கரமான, வேதனையான அழிவின் நெருக்கடியில் இருந்து மீள நாம் ஒன்றாக செயல்பட வேண்டும் எனவும் மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்க உடனடியாக போர் நிறுத்தம் அவசியம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய மக்கள் 1,400 பேரை கொன்று 240க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்ற நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
இதனையடுத்து காஸாவை வான்வழியாக தாக்கி, முற்றுகையிட்டு, தரைவழி ஆக்கிரமிப்பை நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம். இந்த நிலையில், காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குட்டரெஸ் தெரிவிக்கையில், காஸா குழந்தைகளின் கல்லறையாக மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர்.
இஸ்ரேல் தரப்பு சர்வதேச மனிதாபிமான சட்டத்தினை வெளிப்படையாகவே மீறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள 2.7 மில்லியன் மக்களுக்கு உதவி வழங்க ஐ.நா.விற்கு 1.2பில்லியன் டொலர் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பாலஸ்தீன அகதிகள் அமைப்பில் (UNRWA) பணியாற்றிய 89 பேர் காஸாவில் கொல்லப்பட்டதாக குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
போருக்கு முன்பு ஒரு நாளைக்கு 500 லொறிகள் காஸா பகுதிக்கு சென்ற நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 400க்கும் அதிகமான லொறிகள் காசாவுக்குள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.