ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் - வானதி சீனிவாசன் கண்டனம்
12 மார்கழி 2023 செவ்வாய் 12:58 | பார்வைகள் : 1512
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் இன்று ஏற்பட்ட பிரச்சினையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோவில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பக்தர் பலத்த காயமடைந்துள்ளார். அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் ஐயப்ப பக்தர்கள், மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கின்றது. கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க தான் அறநிலையத்துறை; அவர்களை காயப்படுத்துவதற்கு அல்ல. அறம் இல்லா அறநிலையத்துறை அதிகாரிகள்.
இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை, சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்து மதத்தின் மீது சேற்றை வாரி இறைப்பது என இந்து மதத்திற்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்க தொடங்கியுள்ளது. இந்து சமயத்தின் நம்பிக்கையை காக்க இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும். ஐயப்ப பக்தர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.