”49.3 இல்லையென்றால் நீங்கள் இல்லை!” - பாராளுமன்றத்தில் காரசார விவாதம்! - பிரதமர் பதில்!!
12 மார்கழி 2023 செவ்வாய் 15:26 | பார்வைகள் : 3923
நேற்று குடியேற்ற சட்டச்சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியதன் பின்னர், இன்று மீண்டும் சபையில் போர்முரசு எழுந்தது. ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கம் மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் Mathilde Panot (La France Insoumise கட்சி உறுப்பினர்), பிரதமரிடம் சரமாரியான கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்தார். “நீங்கள் ஒன்று தோல்வியடைந்த அரசாங்கம். சிறுபான்மை அரசாங்கம். நேற்று நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள். நிராகரிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் இது கேள்விப்படாதது. பிரான்ஸ் ஒருபோதும் சமத்துவம் இல்லாது இருந்ததில்லை. ஆனால் உங்களின் அரசாங்கம் தொடர்ச்சியாக 49.3 அரசியலமைப்பை பயன்படுத்தி காலத்தை கழிக்கிறீர்கள். 49.3 இல்லையென்றாம் நீங்கள் இல்லை!” என அவர் காரசாரமாக தெரிவித்தார்.
பின்னர் இதற்கு பிரதமர் Élisabeth Borne பதிலடி கொடுத்தார்.
”இடதுசாரிகளான நீங்கள், தற்போது தீவிர வலதுசாரிகளுடன் சமரசம் செய்ய முன்வந்துள்ளீர்கள். சமரசம் செய்துகொள்ள விருப்பம் எழுந்துள்ளது. நீங்கள் குழப்பத்தையே உருவாக்குகிறீர்கள். இது மறைமுகமான எதிர்ப்பு நிலை. சட்ட திருத்தம் குறித்த அக்கறை இல்லை!” என முழங்கினார்.
நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் குடியேற்ற சட்டச் சீர்திருத்தம் ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்த போது, இடது மற்றும் வலதுசாரிக் கட்சிகள் இணைந்து இந்த சட்டச் சீர்திருத்தத்துக்கு எதிராக வாக்களித்து அதனை தோல்வியடையச் செய்திருந்தனர். அதன் எதிரொளியாகவே இன்று இந்த விவாதம் இடம்பெற்றிருந்தது.