முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி
13 மார்கழி 2023 புதன் 09:49 | பார்வைகள் : 1631
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பார்படாஸின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சால்ட் அதிரடியாக 40 (20) ஓட்டங்களும், கேப்டன் பட்லர் (Buttler) 31 பந்துகளில் 39 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் வந்த வில் ஜேக்ஸ் (17), டக்கெட் (14) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் 2 சிக்ஸரை பறக்கவிட்டு அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் 27 (19) ஓட்டங்களில் ரசல் பந்தில் போல்டு ஆனார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தால் இங்கிலாந்து 19.3 ஓவரில் 171 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆந்த்ரே ரசல், அல்சரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளும், ஷெபர்ட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்கத்திலேயே கிங் (22), மேயர்ஸ் (35) அதிரடியில் மிரட்டினர்.
நிதானமாக ஆடிய ஷாய் ஹோப் 30 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஆனால் பூரன் (13), ஹெட்மையர் (1) அடுத்தடுத்து வெளியேறியதால் மேற்கிந்திய தீவுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது கைகோர்த்த ரோவ்மன் பௌல் (Rovman Powell), ஆந்த்ரே ரசல் (Andre Russell) கூட்டணி இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
இதனால் ஜெட் வேகத்தில் இலக்கினை நோக்கி பயணித்த மேற்கிந்திய தீவுகள் அணி 18.1 ஓவரிலேயே வெற்றி பெற்றது.
பௌல் 15 பந்துகளில் 31 ஓட்டங்களும், ரசல் 14 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ரெஹான் அகமது 3 விக்கெட்டுகளும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
வெகுநாட்களுக்கு பின்னர் தேசிய அணியில் களமிறங்கிய ரசல், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் மற்றும் 29 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.