லோக்சபாவில் அத்துமீறல்: அவைக்குள் குதித்து அராஜகம் செய்த 2 பேர் கைது
13 மார்கழி 2023 புதன் 16:29 | பார்வைகள் : 2063
பார்லி., தாக்குதல் நினைவு தினமான இன்று (டிச.,13), லோக்சபாவில் பார்வையாளர் மாடத்தில் இருந்து எம்.பி.,க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் குதித்து அத்துமீறிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கையில் வண்ண புகை குப்பிகளை வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த இருவருக்கு ஆதரவாக பார்லி., வெளியே போராடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பார்லி.,யின் இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த 2001ம் ஆண்டு டிச.,13ல் பலத்த பாதுகாப்பையும் தாண்டி பார்லி., வளாகத்தில் 9 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர், 14 டில்லி போலீசார் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலின் 22வது நினைவு தினம் இன்று (டிச.,13) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று பார்லி., கூட்டத்தொடரின் போது, லோக்சபாவின் பார்வையாளர் அரங்கில் இருந்த 2 இளைஞர்கள் திடீரென எம்.பி.,க்கள் அமர்ந்திருக்கும் அவைக்குள் குதித்தனர்.
அடுத்த சில வினாடிகளில் எம்.பி.,க்களின் இருக்கைகளில் ஏறிகுதித்து முன்னேறி சென்ற இளைஞர்கள், மறைத்து வைத்திருந்த வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பிகளை எடுத்து, அவை முழுதும் புகையாக்கினர். அவர்கள் 'சர்வாதிகாரம் கூடாது' என கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத எம்.பி.,க்கள் இளைஞர்களை மடக்கி பிடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேநேரத்தில் பார்லி.,யின் வெளியே இரு பெண்கள் கோஷம் எழுப்பியவாறு அத்துமீறி பார்லி.,க்குள் நுழைய முயன்றனர். ஹரியானாவை சேர்ந்த நீலம் (வயது 42), மஹாராஷ்டிராவை சேர்ந்த அன்மோல் ஷிண்டே (வயது 25) ஆகிய இரு பெண்களையும் தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பார்லி.,யின் இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.
இரண்டு இளைஞர்களும், பா.ஜ., எம்.பி., பிரதாம் சிம்ஹா அளித்த அனுமதிச்சீட்டை பயன்படுத்தி உள்ளே வந்ததாக, அம்ரோஹா தொகுதி எம்.பி., குன்வர் டானிஸ் அலி குற்றம்சாட்டி உள்ளார்.
சாகர் ஷர்மா - மனோரஞ்சன்
அவைக்குள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களின் விவரம் தெரியவந்துள்ளது. சாகர் ஷர்மா, மனோரஞ்சன் என்ற இருவர் இந்த செயலில் ஈடுபட்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதில் மனோரஞ்சன் என்பவர் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் என்றும், அம்மாநிலத்தில் இன்ஜினியரிங் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பார்லிமென்ட்டில் தாக்குல் நடத்திய இளைஞர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு அடைக்கலம் தந்ததாக விக்கி ஷர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.