மக்களுடன் முதல்வர் திட்டம்: வரும் 18ம் தேதி துவக்கம்
15 மார்கழி 2023 வெள்ளி 06:33 | பார்வைகள் : 2045
தமிழக அரசின் சேவைகள், பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர, 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை வரும் 18ம் தேதி, கோவையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும், பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, 'முதல்வரின் முகவரித்துறை' என, தனித்துறையை உருவாக்கினார்.
இதன் வழியே கடந்த இரண்டரை ஆண்டுகளில், 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படுகிறது.
முதல்வர் நேரடியாக மாவட்டங்களுக்கு சென்று, 'கள ஆய்வில் முதல்வர்' என்ற முன்னெடுப்பின் கீழ், ஆய்வு கூட்டங்கள் நடத்தி, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள், குறிப்பிட்ட காலத்திற்குள், பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, அரசின் சேவைகள், விரைவாக, எளிதாக மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தவும், 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை வரும், 18ம் தேதி, கோவையில் முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.