Paristamil Navigation Paristamil advert login

நவம்பரில் மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு

நவம்பரில் மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு

15 மார்கழி 2023 வெள்ளி 12:00 | பார்வைகள் : 2235


நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு, நவம்பர் மாதத்தில் 0.26 சதவீதமாக அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறிப்பாக, வெங்காயம் மற்றும் சில காய்கறிகளின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து ஏழு மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் மைனஸ் நிலையிலேயே பதிவாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வு:

கடந்த அக்டோபர் மாதம், பணவீக்கம் மைனஸ் 0.52 சதவீதமாக பதிவாகி இருந்தது. இறுதியாக, கடந்த மார்ச் மாதம் தான் பணவீக்கம் 1.41 சதவீதம் என சற்று அதிகமாக பதிவாகி இருந்தது.

இதுகுறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: உணவுப் பொருட்கள், கனிமங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கணினி, மின்னணு மற்றும் ஆப்டிகல் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வே, கடந்த நவம்பர் மாதம் பணவீக்கம் அதிகரிக்க முதன்மையான காரணமாகும்.

உணவு பொருட்கள்:

உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த அக்டோபர் மாதத்தில் 2.53 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பரில் 8.18 சதவீதமாக அதிகரித்தது. கடந்த மாதம் வெங்காயத்தின் பணவீக்கம் 101.24 சதவீதமாக அதிகரித்தது.

உள்நாட்டு சந்தையில் கிலோ 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தவும், அதன் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கும் நோக்கிலேயே, அரசு கடந்த வாரம் வெங்காயத்தின் ஏற்றுமதியை, அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை தடை செய்து உத்தரவிட்டது.

வரும் ஜனவரி மாதத்துக்குள் வெங்காயத்தின் விலை, கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் என குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம், நெல்லில் 10.44 சதவீதமாகவும்; பழங்களில் 8.37 சதவீதமாகவும்; உருளைக்கிழங்கில் மைனஸ் 27.22 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

தயாரிக்கப்பட்ட பொருட்களில் பணவீக்கம் மைனஸ் 0.64 சதவீதமாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் மைனஸ் 4.61 சதவீதமாகவும்; உணவு அல்லாத பிற பொருட்களில் மைனஸ் 3.20 சதவீதமாகவும் இருந்தது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்