வசதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்: அமைச்சர் சுப்பிரமணியன்
17 மார்கழி 2023 ஞாயிறு 14:00 | பார்வைகள் : 1852
மழைக்கால நிவாரண நிதியை வருமான வரி செலுத்தக்கூடிய உயர் வருவாய் உடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம், என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக, நியாயவிலை கடைகளில் டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. சில வகையான அட்டைகளுக்கு உதவி தொகை வழங்கப்படாது என செய்தி பகிரப்பட்டு வருகிறது.
நியாயவிலை கடைகளில் அரிசி, சர்க்கரை, வெள்ளை என, மூன்று வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில், வெள்ளை அட்டைகள் முகவரி ஆவணங்களுக்கு பயன்படுத்தப்படும். அதற்கு எந்தவிதமான உணவு பொருட்களும் வழங்கப்படுவதில்லை. அரிசி அட்டைதாரர்களுக்கு, 100 சதவீதம் நிவாரண தொகை வழங்கப்படுகிறது.
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், வருமான வரி செலுத்துபவர்களுக்கும் பாதிப்புகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.
அவர்கள் நியாயவிலை கடைகளில் விண்ணப்பிக்கலாம். பாதிப்புக்கு உள்ளான மக்கள் அச்சப்பட வேண்டாம். அனைவருக்கும் மழைக்கால நிவாரண நிதி வழங்கப்படும்.
அரசு பணியாளர்கள், 'ஏ' மற்றும் 'பி' என்று செல்லக்கூடிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட மாட்டாது. அதேநேரம், வருமான வரி செலுத்தக்கூடிய உயர் வருவாய் உள்ளவர்கள், மழைக்கால நிவாரணத்துக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.<br><br>இவ்வாறு அவர் கூறினார்.