டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்திய நெதன் லயன்
18 மார்கழி 2023 திங்கள் 09:03 | பார்வைகள் : 1598
பேர்த் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி நான்கு நாட்களில் முடிவடைந்த அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 360 ஓட்டங்களால் அமோக வெற்றியிட்டியது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடராகவும் அமையும் இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா 12 வெற்றிப் புள்ளிகளை ஈட்டிக்கொண்டது.
முதலாவது இன்னிங்ஸில் டேவிட் வோர்னர் குவித்த சதம், மிச்செல் மார்ஷ் 2 இன்னிங்ஸ்களிலும் பெற்ற அரைச் சதங்கள், 2ஆவது இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா பெற்ற அரைச் சதம், அவுஸ்திரேலியர்களின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்த வெற்றியில் பெரும் பங்காற்றின.
37 வயதான டேவிட் வோர்னர் தனது 110 ஆவது டெஸ்ட் போட்டியில் 26 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இதனிடையே 2 ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் வீரர் பாஹிம் அஷ்ரபின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் நெதன் லயன் 500 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்தி செய்தார்.
இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நெதன் லயன் 501 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட்களைப் பூர்த்தி செய்த 8 ஆவது வீரர் நெதன் லயன் ஆவார்.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்றது.
முதலாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் சார்பாக இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், புதிய அணித் தலைவர் ஷான் மசூத் ஆகிய மூவரே 30 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் பெற்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 487 (டேவிட் வோர்னர் 164, மிச்செல் மார்ஷ் 90, உஸ்மான் கவாஜா 41, ட்ரவிஸ் ஹெட் 40, அலெக்ஸ் கேரி 34, ஆமிர் ஜமால் 111 - 6 விக்., குரம் ஷாஸாத் 83 - 2 விக்.)
பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 271 (இமாம் உல் ஹக் 62, அப்துல்லா ஷபிக் 42, ஷான் மசூத் 30, நெதன் லயன் 66 - 3 விக்., பெட் கமின்ஸ் 35 - 2 விக்., மிச்செல் ஸ்டார்க் 68 - 2 விக்.)
அவுஸ்திரேலியா 2ஆவது 233 - 5 விக். டிக்லயார்ட் (உஸ்மான் கவாஜா 90, மிச்செல் மார்ஷ் 63 ஆ.இ., ஸ்டீவன் ஸ்மித் 45, குரம் ஷாஸாட் 45 - 3 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 450 ஓட்டங்கள்) சகலரும் ஆட்டம் இழந்து 86 (சௌத் ஷக்கீல் 24, உதிரிகள் 20, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 13 - 3 விக், மிச்செல் ஸ்டார்க் 31 - 3 விக்., நெதன் லயன் 14 - 2 விக்.) ஆட்டநாயகன்: மிச்செல் மார்ஷ்.