தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் கனமழை: இரவு 10 மணி வரை ரெட் அலர்ட்
18 மார்கழி 2023 திங்கள் 09:12 | பார்வைகள் : 2211
தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் கனமழை: இரவு 10 மணி வரை "ரெட் அலர்ட்"விடுக்கப்பட்டு உள்ளது.மேலும் 100 பேர் அடங்கிய 4 தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
வீட்டுக்குள் தண்ணீர்
திருநெல்வேலி பேட்டை நரிக்குறவர் காலனியில் மழை வெள்ளத்தால் சிக்கித் தவித்த பொதுமக்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு ஸ்காட் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். திருநெல்வேலி டவுன், வ.உ.சி தெரு, பாரதியார் தெருவில் தொடர் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை தங்க வைக்க பாளை பெல் பள்ளி, மேலப்பாளையம் மேலநத்தம் பள்ளிக்கு எதிரே உள்ள திருமண பண்டபங்கள் தயாராகி வருகின்றன.
நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் மழை நீர் புகுந்த வீட்டில் மீட்புப் பணி நடந்தது.
மின்சார துண்டிப்பு
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது
அப்பாவு ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
மழைப்பதிவு
திருநெல்வேலி மாவட்டம் இன்று காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை பெய்த மழை விவரம்
நம்பியாறு அணை - 25 செ.மீ.,
மூலைக்கரைப்பட்டி - 26 செ.மீ.,
அம்பாசமுத்திரம் -20 செ.மீ.,
சேரன்மாதேவி -23 செ.மீ.,
மணிமுத்தாறு -17 செ.மீ.,
பாளையங்கோட்டை -26 செ.மீ.,
நான்குனேரி -22 செ.மீ.,
பாபநாசம் -22 செ.மீ.,
ராதாபுரம் -21 செ.மீ.,
திருநெல்வேலி- 16 செ.மீ.,
சேர்வலாறு அணை -15 செ.மீ.,
கன்னடியன் அணை - 14 செ.மீ.,
களக்காடு -19 செ.மீ.,
கொடுமுடியாறு அணை -20 செ.மீ.,
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் சேர்வலாறு அணைகளுக்கு வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது. அணைகளில் இருந்து வினாடிக்கு 17,000 கன அடி வீதம் நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மாலைக்கு மேல் 30 ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குமரி, நெல்லையில் மழை அதிகம்!
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனில், கன்னியாகுமரியில் இயல்பை காட்டிலும் 81 சதவீதமும், நெல்லையில், 61 சதவீதமும் கூடுதல் மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சேவியர் காலனியில் நீரோடையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் தற்போது வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் விநாயகர் கோயில் பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருநெல்வேலிக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு
மாவட்ட பேரிடர் கட்டுப்பாடு மையம் - 1077
மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1070
மின்னகம் உதவி மையம் - 94987 94987
படகு போக்குவரத்து நிறுத்தம்
கன்னியாகுமரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சுற்றுலாத்தலமான விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் சுற்றுலாப்பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
431 மி.மீ., மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை ஆறு மணி முதல் 12 மணி வரை 431. 70 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 122 மி.மீ.,மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக 97 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது.
மதுரையில் தரையிறங்கிய விமானங்கள்!
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால், பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற இரு இன்டிகோ விமானங்கள், மோசமான வானிலை காரணமாக, மதுரையில் தரையிறக்கப்பட்டன.
வானிலை மையம் எச்சரிக்கை
மழை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று(டிச.,17) அதி கனமழை பெய்யும் என்பதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை(டிச.,18)
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நாளை(டிச.,18) பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 19 ஆம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
கோவை ,திருப்பூர், மதுரை , தேனி ,திண்டுக்கல் ,சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர், நாகை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரையில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி குமரி ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண ப பணிகளை முடுக்கி விட அமைச்சர்கள் மற்றும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.