உலகின் கவனத்தை ஈர்த்த அதிசய இரட்டை குழந்தைகள்!
26 மார்கழி 2023 செவ்வாய் 06:44 | பார்வைகள் : 1754
அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் பிறந்த பெண்ணுக்கு இரண்டு கருப்பைகளிலும் கரு உருவாகி இரட்டை குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர் (வயது 32).
பிறக்கும் போதே இவருக்கு அரிய நிகழ்வாக பார்க்கப்படும் இரண்டு கருப்பைகள் இருந்துள்ளது.
இருப்பினும் 17-வயதில் தான் கெல்சிக்கு இரண்டு கருப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
கெல்சிக்கு மகிழ்ச்சியான இல்லறத்தில் மூன்று குழந்தைகள் உள்ளன. மீண்டும் கெல்சி கர்ப்பம் தரித்தார்.
இதில் வியப்பு என்னவென்றால் கெல்சியின் இரண்டு கருப்பைகளிலும் கரு உருவானது.
முந்தைய மூன்று கர்ப்பத்திலும் ஒரு கருப்பையில் மட்டுமே கரு உருவாகியிருந்தது.
இந்த நிலையில், 4-வதாக கர்ப்பம் தரித்த கெல்சிக்கு இரண்டு கருப்பைகளிலுமே கரு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் அலபாமா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது அழகான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
மருத்துவர்கள் இது பற்றி கூறுகையில்,
கெல்சி ஹேட்சர் கர்ப்பம் தரித்தது முதல் குழந்தை பிறப்பு வரை கொஞ்சம் அதிகம் ரிஸ்க் நிறைந்ததாகவே இருந்தது. 39 வாரத்தில் அவருக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறி ஏற்பட்டது.
20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை இரண்டும் ஆரோக்கியமாக பிறந்தன. முதல் குழந்தை இயற்கையான முறையிலும் இரண்டாவது குழந்தை சி செக்ஷன் என சொல்லப்படும் அறுவை சிகிச்சை மூலமாக பிறந்தது.
இரட்டை குழந்தைகள் என்பது ஒரு கருப்பையில் பிறக்கும் இரண்டு குழந்தைகளை குறிக்கும்.
ஆனால் இரண்டு கருப்பைகளில் பிறந்த இந்த குழந்தைகளை சகோதர இரட்டையர்கள் என்று அழைக்கலாம் என்றார்." மருத்துவ உலகில் மிகவும் அரிதான ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
பல லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே யூட்ரஸ் டைடெல்பிஸ் என்ற இரண்டு கருப்பைகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.