AI தொழில்நுட்பத்தால் வேலை இழக்கும் அபாயமா? ஆய்வில் வெளிவந்த தகவல்
26 மார்கழி 2023 செவ்வாய் 09:38 | பார்வைகள் : 1845
தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊழியர்களின் வேலைவாய்ப்பிற்கு எந்த அளவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது.
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழில்நுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன.
முதலில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்திரவியல், சாப்ஃட்வேர் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ரோபோ வக்கீல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது உருவத்தை விர்ச்சுவலாக்கி அதன் மூலம் டேட்டிங் தளம் உருவாக்கி வாடிக்கையாளர்களை பேசி பழக வைத்து சம்பாதித்து வருகிறார்.
நியூயார்க்கில் உள்ள ஒரு பெண் ஒருபடி மேலே சென்று தனது கணவரை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி வருகிறார்.
இந்தியாவில் முதல்முறையாக ஒடிசாவில் OTV என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தனர்.
பின்பு, கன்னட தொலைக்காட்சியான 'பவர் டிவி'யில் கன்னட மொழியில் பேசும் ஏஐ செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அறிமுகம் செய்தனர்.
இந்நிலையில், Skills Landscape 2024 என்ற தலைப்பில் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊழியர்களின் வேலை எந்த அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், தொழில்நுட்ப பணியாளர்கள், மாணவர்கள் உள்பட சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில், தொழிநுட்ப வளர்ச்சியால் தங்களது வேலைக்கு அபாயம் இருப்பதாக 82 சதவீதம் பேரும், தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்புவதாக 78 சதவீதம் பேரும், கூறினர்.
இதன்மூலம், தங்களது வேலைவாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்காக புதிதாக கற்றுக்கொள்ள வேண்டிய எண்ணம் எழுந்துள்ளது என்பது தெரியவந்தது. அதே சமயம், தொழில்நுட்பம் குறித்து தங்களுடைய நிறுவனங்கள் சார்பில் முறையான பயிற்சி கொடுக்கப்படவில்லை என 43 சதவீதம் பேரும், தொழில்நுட்பத்தால் அறிவுத்திறன் வளர்ந்துள்ளது என்று 39 சதவீதம் பேரும் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஹீரோ வெயிர்டு என்ற நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அக்ஷய் முஞ்சல், "தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது" என்று கூறினார்.
மேலும், இந்த ஆய்வின் மூலம் டுத்த 5 ஆண்டுகளில் செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.