பெரும் சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ...
1 மார்கழி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 1850
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நிறுவனமான பைனான்ஸை ஊக்குவித்ததற்காக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது குழு ஒன்று இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த வழக்கில், ரொனால்டோ விளம்பரம் செய்துள்ளமையால் நம்பிக்கையுடன் முதலீடு செய்த நிலையில், தற்போது பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ 8,332 கோடி) இழப்பீடு கோரியுள்ளனர்.
2022 நவம்பர் மாதம் பைனான்ஸ் நிறுவனம் ரொனால்டோ பெயரில் CR7 என்ற NFT எனப்படும் non-fungible token களை வெளியிட இருப்பதாக அறிவித்தது.
தம்மை இது நாள் வரையில் ஆதரித்த ரசிகர்களுக்கு தாம் அளிக்கும் வெகுமதி இது என ரோனால்டோ அப்போது குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து 77 டொலர் மதிப்பில் NFT விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் ஓராண்டுக்கு பின்னர், அந்த NFTக்களின் விலை வெறும் 1 டொலர் என கடும் சரிவை சந்தித்தது.
மேலும், ரொனால்டோ முன்னெடுத்த விளம்பரங்களால் பைனான்ஸ் நிறுவனம் இணையத்தில் தேடுவோரின் எண்ணிக்கை 500 சதவீதம் அதிகரித்தது.
மேலும், பலர் ஆர்வமுடன் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யவும் தொடங்கினர். தற்போது பெருந்தொகை இழப்பை எதிர்கொண்ட சிலர், அமெரிக்காவில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும், பைனான்ஸ் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காக ரொனால்டோ எவ்வளவு தொகை பெற்றுக்கொண்டார் என்பதையும் வெளியிட வேண்டும் என கோரியுள்ளனர்.
ஆனால் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கிய பைனான்ஸ் இணை நிறுவனர் Changpeng Zhao குற்றவாளி என நிரூபணமான நிலையில், 50 மில்லியன் டொலர் அபராதம் செலுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.