”இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியவில்லை!” - தாக்குதலுக்கு முன்பாக காணொளி வெளியிட்ட பயங்கரவாதி!
3 மார்கழி 2023 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 4951
நேற்று சனிக்கிழமை இரவு பரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்பாக பயங்கரவாதி சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
1997 ஆம் ஆண்டு Neuilly-sur-Seine நகரில் பிறந்த குறித்த பயங்கரவாதி ஈரானிய பெற்றோர்களுக்கு பிறந்தவர் என அறிய முடிகிறது. நாட்டு அச்சுறுத்தலான நபர்களை கொண்ட S பிரிவில் ( fiché S) கண்காணிக்கப்படும் குறித்த பயங்கரவாதி தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்பாக இரண்டு நிமிட காணொளி ஒன்றை X சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில் ”கலிபா இஸ்லாமிய அமைப்பின் ஆதரவாளன்” என தன்னை குறிப்பிட்டுள்ளார். அதேவேளை காவல்துறையினரால் கைது செய்யப்படும் போது “இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதை (*ஆஃப்காணிஸ்தால் மற்றும் பாலஸ்தீனத்தில்) என்னால் ஆதரிக்க முடியவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
***
உள்துறை அமைச்சர் Gérald Darmanin மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றனர். தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, Bir-Haikem மேம்பாலத்தில் நடந்து சென்ற பயங்கரவாதி, எதிரே வந்த சுற்றுலாப்பயணி ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். தாக்குதலின் போது அல்லா அக்பர் என கோஷமிட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த சுத்தியல் ஒன்றினால் மேலும் இருவரைத் தாக்கியுள்ளார்.
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நான்கு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆயுததாரியை கைது செய்ய முற்பட்டபோது “தன்னிடம் வெடிபொருட்கள் இருக்கிறது’ என குறிப்பிட்டு கைகளை பின்னால் கட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியால் சுடப்பட்டு அவன் விழுத்தப்பட்டார்.
பயங்கரவாதி Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர் எனவும், அவன் நீதித்துறை மற்றும் அதிரடிப்படையினரான SGSI இனால் நன்கு அறியப்பட்டவர் எனவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.