யூதர்களின் திருவிழா - தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் காவல்துறையினர்!!
4 மார்கழி 2023 திங்கள் 07:03 | பார்வைகள் : 4215
யூதர்களின் Hanouka எனும் திருவிழா ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், யூதர்கள் அதிகளவில் செறிந்து வாழும் பகுதிகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட உள்ளன.
Hanouka அல்லது Chanukah என அழைக்கப்படும் இந்த திருவிழா குறைந்தது எட்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த எட்டு நாட்களும் வீடுகளில் தீபமேற்றி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு உணவுகள் பகிர்ந்துகொள்வார்கள். இந்த நாட்களில் பிரான்சில் வசிக்கும் யூதர்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் Gérald Darmanin நேற்று ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக தெரிவிக்கையில், “பயங்கரவாத அச்சுறுத்தல் நம் நாட்டை மிகுந்த பதட்டத்தில் வைத்துள்ளது. குறிப்பாக இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் பின்னர் அதன் தீவிரத்தை உணர்ந்துள்ளோம். அதிக விழிப்புணர்வுடன் நாம் உள்ளோம்!” என தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை பரிசில் தீவிர இஸ்லாமியவாதி ஒருவர் கத்தி மற்றும் சுத்தியலாம் ஒருவரைக் கொன்று மேலும் இருவரைக் காயப்படுத்தினார். அதேவேளை, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டையில் மேற்கு நாடுகளில் பதட்டங்கள் அதிகரித்துள்ளது. பிரான்சில் நவம்பர் நடுப்பகுதியில் 1,500 இற்கும் மேற்பட்ட யூத விரோத செயல்கள் மற்றும் கருத்துக்கள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 600 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.