இலங்கை முழுவதும் மின் துண்டிப்பு - கடும் நெருக்கடியில் மக்கள்
9 மார்கழி 2023 சனி 16:41 | பார்வைகள் : 2693
இலங்கை முழுவதும் மின் துண்டித்த நிலையில் பல மணி நேரங்களின் பின்னர் கொழும்பு மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகள் மற்றும் தென் மாகாணத்தில் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று மாலை கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் பாரிய மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
இவ்வாறாயினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது அத்தியாவசியமான இடங்களுக்கு போவர் மூலம் நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.