அ.தி.மு.க., கூட்டணி தேவையா? கருத்து கேட்டு நட்டா கடிதம்!
10 தை 2024 புதன் 00:46 | பார்வைகள் : 2158
தமிழக அரசியல் கள நிலவரம் எப்படி உள்ளது; அ.தி.மு.க., கூட்டணி வேண்டுமா; தனித்து போட்டியிடலமா; மற்ற கட்சிகளின் நிலை உள்ளிட்டவை தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ.,வில் உள்ள, 15 முக்கிய மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள், தங்களின் கருத்தை எழுதி, மூடி சீலிட்டப்பட்ட கவரில், டில்லிக்கு தபாலில் அனுப்பியுள்ளனர். <br><br>இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகளுக்கு, 12 - 13 கேள்விகளுக்கு பதில்கள் அளிக்குமாறு, கட்சி மேலிடம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் எவ்வளவு உயர்ந்திருக்கும் என கணிக்கப்படுகிறது; லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடலாமா; சிறிய கட்சிகளின் நிலை என்ன; அ.தி.மு.க.,வுடனான உறவு எப்படி உள்ளது; அக்கட்சியோடு கூட்டணி அமைப்பது சாத்தியமா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
நிர்வாகிகளும் தங்களின் கருத்தை விரிவாக எழுதி, நட்டாவுக்கு அனுப்பி விட்டனர். அதன் அடிப்படையில், கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது என தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறின.