Paristamil Navigation Paristamil advert login

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; தமிழகம் வருகிறது குஜராத் நிபுணர் குழு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு;  தமிழகம் வருகிறது குஜராத் நிபுணர் குழு

10 தை 2024 புதன் 00:51 | பார்வைகள் : 1674


கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஆய்வு பணியில் ஈடுபட, குஜராத் மாநிலத்தில் உள்ள, தேசிய தடய அறிவியல் பல்கலை நிபுணர்கள், வரும், 26ல் தமிழகம் வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, மறைந்த ஜெயலலிதா தங்கி வந்த சொகுசு பங்களாவில், 2017 ஏப்., 23ல் கொலை, கொள்ளை நடந்தது. 

இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட, 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் கனகராஜ், சாலை விபத்தில் மர்மான முறையில் இறந்தார். அடுத்தடுத்து, நான்கு பேர் மர்மான முறையில் இறந்துள்ளனர்.

கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள் குறித்து, 36 பேர் அடங்கிய, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட, 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். 


கோடநாடு மலைப்பகுதி என்பதால், பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அவற்றில், 30 பேரின் மொபைல் போன் அழைப்புகள் அடங்கிய, 10 'டிஜிட்டல் டேப்'களை, திருச்சி பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகத்தில் இருந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சேகரித்துள்ளனர்.

ஆய்வுக்காக, குஜராத் காந்தி நகரில் உள்ள, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கு அனுப்பினர். இது தொடர்பாக, எஸ்.பி., மாதவன் அங்கு சென்று, நிபுணர்களுடன் ஆலோசனை செய்தார். அப்போது, 'நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தால் தான், திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் உள்ள பிரதான சர்வரில் இருந்தும், கூடுதல் தகவல்களை பெற முடியும்' என்று தெரிவித்தனர். 

இதையடுத்து அவர்கள், திருச்சி வர அழைப்பு விடுக்கப்பட்டது. வரும், 26 மற்றும் பிப்., முதல் வாரத்தில், இரண்டு கட்டங்களாக ஆய்வு செய்ய, தமிழகம் வர உள்ளதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்