ரவி சாஸ்திரி, பரோக் இன்ஜினியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: BCCI அறிவிப்பு
24 தை 2024 புதன் 08:29 | பார்வைகள் : 1752
பிசிசிஐ விருதுகள் 2024 விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.
2024 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
2019ம் ஆண்டு ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த விருதுகள் வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற விழாவில் இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளரும், இந்திய ஆல்-ரவுண்டருமான ரவி சாஸ்திரி மற்றும் இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ப்ரோக் இன்ஜினியர் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதான சிகே நாயுடு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி இணைந்து வழங்கினார்.
ரவி சாஸ்திரி இதுவரை 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 சர்வதேச சதங்கள் உடன் மொத்தமாக 6938 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
மேலும் பந்துவீச்சிலும் 280 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக ரவி சாஸ்திரி எடுத்துள்ளார்.
அத்துடன் 1983ல் உலகக் கோப்பை வெற்றி அணியிலும், 1985ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றி அணியிலும் ரவி சாஸ்திரி இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.