இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை; அண்ணாமலை கோரிக்கை
31 மார்கழி 2023 ஞாயிறு 15:29 | பார்வைகள் : 2378
இலங்கையிலிருந்து வந்து முகாம்களில் தங்கியிருக்கும்போது பிறந்தவர்கள், மற்றும் தீவிர குற்றப்பின்னணி இல்லாதவர்கள் ஆகியோருக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து, மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று, அண்ணாமலை கூறினார்.
இந்திய வம்சாவழித் தமிழர்கள், இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், டில்லியில் தபால் தலை வெளியிடப்பட்டது.
தபால் தலையை பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட, இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் தொண்டைமான் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.,வின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு பொறுப்பாளர் விஜய், தமிழக சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர், பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில், தமிழத்துக்கு வந்த 5 முதல் 6 லட்சம் எண்ணிக்கையிலான தமிழர்களுக்கு, முறையான தங்குமிடம் செய்து கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட, நிறைய வாக்குறுதிகள் தரப்பட்டன. அவை மேலும் சிறப்பாக, நிறைவேற்றப்பட வேண்டும்.
தவிர, வெவ்வேறு காலகட்டங்களில், இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்திய வம்சாவழித் தமிழர்கள் பலர், இந்தியாவுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் பலரும், இங்கு குடியுரிமை இல்லாமல் இருந்து வருகின்றனர்.
இவர்களில், சட்டத்தை மீறி சிலர் இங்கு வந்துள்ளனர். அப்படி வந்தவர்களில், இங்கு குழந்தை பெற்றவர்களும் உள்ளனர்.
இன்னும் சிலருக்கோ, இலங்கையிலும் வழக்குகள் இல்லை; இங்கும் இல்லை. இருந்த போதும், அவர்களுக்கு குடியுரிமை இல்லாமல் இருக்கிறது. அதனால், அப்படிப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது.
இதையடுத்து, தமிழக முகாம்களில் பிறந்தவர்களுக்கும், தீவிரமான குற்றப்பின்னணி இல்லாதவர்களுக்கு குடியரிமை வழங்குவது குறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை, உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.