இலங்கையில் அடுத்த மாதம் மின் கட்டணத்தில் மாற்றம்!
5 தை 2024 வெள்ளி 14:33 | பார்வைகள் : 2790
பொது மக்களுக்கான மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகளை மின்சார சபை ஏற்கனவே பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அருந்திக தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான அடிப்படை வேலைகள் அதாவது விலை திருத்தம் அடுத்த மாதம் ஆரம்பத்திற்கு முன்னர் கொண்டு வரப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அருந்திக மேலும் தெரிவித்தார்.
"எனக்கு சதவீதத்தை இங்கு சொல்ல முடியாது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுதான் அதற்கு முழுப் பொறுப்பு. நாம் காட்டும் இலக்கத்துக்கும் அவர்கள் காட்டும் இலக்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தால், அது ஒரு பிரச்சனையாகிவிடும். விலையை குறைத்து வெயில் காலத்தில் மீண்டும் அதிகரிப்பது எமது நோக்கமில்லை. இதனை தொடர்ச்சியாக கொண்டு செல்வதே எமது திட்டம்.
"பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சுமார் 20 நாட்களாக நாங்கள் வழங்கிய தரவுகளை சரிபார்த்து வருகிறது. எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு முன் விலை திருத்தத்தை வழங்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்." என இராஜாங்க அமைச்சர் இந்திக அருந்திக தெரிவித்துள்ளார்.