இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியல்: மீண்டும் முந்திய அதானி
5 தை 2024 வெள்ளி 15:33 | பார்வைகள் : 2196
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 97.6 பில்லியன் டாலர் சொத்து உள்ளது.
பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் ‛அதானி குழுமம்' பங்குச்சந்தை வர்த்தகத்தில் மோசடி செய்து உள்ளது' என ஹின்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. இதனால், அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த அதானி பின்னடைவை சந்தித்தார்.
இது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‛ இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அல்லது சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. ‛செபி' அமைப்பு தன் விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதனையடுத்து, பங்குச்சந்தையில் ‛அதானி' குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலையேற்றம் கண்டன.
இந்நிலையில் ‛புளூம்பெர்க்' வெளியிட்ட பட்டியலில், ஆசியா மற்றும் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை முந்தி முதலிடத்தை பிடித்த அதானியின் சொத்து மதிப்பு 97.6 பில்லியன் டாலர் ஆக அதிகரித்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 97 பில்லியன் டாலர் ஆக உள்ளது.
அதேநேரத்தில், உலக பணக்காரர் பட்டியலில் அதானி 12வது இடத்திலும், முகேஷ் அம்பானி13வது இடத்திலும் உள்ளனர்.