மத்திய அரசு நிதியை விரைந்து தரவேண்டும்: தங்கம் தென்னரசு
5 தை 2024 வெள்ளி 17:01 | பார்வைகள் : 1726
மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி வழங்குவதில்லை எனக் குற்றம் சாட்டிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விரைந்து நிதியை தரவேண்டும் எனக் கோரியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தங்கம் தென்னரசு கூறியதாவது:
மாநில அரசுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. நம்மிடம் இருந்து செல்லும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் திரும்ப வருகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரி பகிர்வு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை. மறைமுக வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதுவும் தெரிவிக்கவில்லை.
2014 முதல் 2023 வரை மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது. நிதி பற்றாக்குறை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியை தமிழக அரசு சிறப்பாக கையாள்கிறது.
தமிழகத்தில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றிருக்கிறது. உ.பி., கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசே அதிக நிதி
ஆனால், தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு நடப்பாண்டு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. வெறும் ரூ.3,273 கோடி தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை விட மாநில அரசு அதிக நிதி கொடுக்கிறது.
தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அண்மையில் பேரிடர்களை சந்தித்தன. தமிழக அரசு கோரிய உடனடி வெள்ள நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் கோடியை விரைந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.