பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நிலச்சரிவு - பலர் மாயம்
9 மாசி 2024 வெள்ளி 07:46 | பார்வைகள் : 2939
தெற்கு பிலிப்பைன்சில் தங்கச் சுரங்கம் அமைந்துள்ள கிராமத்திலேயே பெரும் மழைக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 100 பேர்களுக்கும் மேல் மாயமான நிலையில், சுமார் 60 மணி நேரங்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமை சிறுமி ஒருவர் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் வயது உட்பட தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. சம்பவத்தன்று நிலச்சரிவில் சிக்கி 11 பேர்கள் கொல்லப்பட்டனர்.
மசாரா கிராமத்தில் மீட்புக்குழுவினர் கைகளால் மண்ணைத் தோண்டி, உயிருடன் எவரும் சிக்கியுள்ளனரா என தேடியுள்ளனர்.
இதன்போதே சிறுமி அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நிலச்சரிவு ஏற்பட்டு 60 மணி நேரம் கடந்துள்ளதால், இனி எவரும் உயிருடன் தப்ப வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது.
இந்த நிலையிலேயே சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இது தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தொடரவே முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேற்றில் புதைந்து, அழுகையுடன் காணப்படும் சிறுமியின் புகைப்படம் சமூக ஊடக பக்கத்தில் வெளியாகியுள்ளது. சிறுமியை மீட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது, வீடுகள் இடிந்து விழுந்தன மற்றும் தங்கச் சுரங்கத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்துச் செல்ல காத்திருந்த மூன்று பேருந்துகள் மற்றும் ஒரு ஜீப்னியும் மண்ணுக்குள் புதைந்தது.
இச்சம்பவத்தில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயங்களுடன் தப்பினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மலைப்பிரதேசம் என்பதாலும், பெரு மழை ஏற்படுவதாலும், பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவு என்பது அடிக்கடி ஏற்படும் நிகழ்வாக உள்ளது. அத்துடன், சுரங்க வேலைகளுக்காக காடுகளை அழிப்பதும் காரணமாக கூறப்படுகிறது.
2007 மற்றும் 2008ல் இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர், கட்டுமான வேலைகள் அனைத்தும் இப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.