பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ரசாயனம்: உணவு பாதுகாப்பு துறை உறுதி
17 மாசி 2024 சனி 02:48 | பார்வைகள் : 1603
சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பஞ்சு மிட்டாய்களில், புற்றுநோயை ஏற்படுத்தும், 'ரோட்டமின் பி' ரசாயனம் கலந்திருப்பது, உணவு பாதுகாப்பு துறை சோதனையில் உறுதியாகி உள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில், அம்மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலந்திருப்பதாக எச்சரித்தனர்.
அதைதொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில், பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களிடம் இருந்து, 1,000 பாக்கெட் பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விற்பனைக்கு வைத்திருந்த பஞ்சு மிட்டாய்களின் மாதிரிகளை சேகரித்து, உணவுப் பாதுகாப்பு துறையின் ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய, 'ரோட்டமின் பி' ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துஉள்ளது.
அத்துடன், ஆய்வில் கண்டுபிடிக்க முடியாத சில ரசாயன வகைகளையும், 'பஞ்சு மிட்டாய்'களில் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுஉள்ளது.