சீமான் கட்சி நிர்வாகிக்கு வந்த அழைப்புகள்: என்.ஐ.ஏ., ஆய்வு
17 மாசி 2024 சனி 02:51 | பார்வைகள் : 2127
விடுதலை புலிகள் தொடர்பு குறித்து, சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகி, 'சாட்டை' துரைமுருகன் உள்ளிட்டோருக்கு வந்த வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகள், பணப் பரிமாற்றம் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுகன், இசை மதிவாணன் வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தி, மொபைல் போன், 'பென்டிரைவ்' உள்ளிட்ட, 'டிஜிட்டல்' ஆவணங்களை கைப்பற்றினர். அதன்பின், துரைமுருகன் உள்ளிட்ட மூவரிடம் பல மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். விடுதலை புலிகள் தொடர்பாக, துரைமுருகனிடம் இருந்து, 1,500 வீடியோக்களையும் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: 'துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தயாரித்தவர்களுக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான், 'யு டியூப்'பில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களை பார்த்து, வெளிநாடுகளில் இருந்து பலர் அழைத்து பாராட்டுவர். அவர்கள் யார் என அறிமுகம் இல்லை' என, துரைமுருகன் கூறினார்.
ஆனால், விடுதலை புலிகள் அமைப்பினரிடம் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக, துரைமுருகன் உள்ளிட்டோரின் மொபைல் போனுக்கு வெளிநாட்டு அழைப்புகள் வந்துள்ளன. அதிகபட்சமாக, ஜெர்மனியில் இருந்து சந்தேக நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் பண பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.