ஓய்வை அறிவித்த இத்தாலியின் கால்பந்து ஜாம்பவான் ஜியான்லுஜி பஃப்போன்
3 ஆவணி 2023 வியாழன் 04:52 | பார்வைகள் : 3430
இத்தாலியின் கால்பந்து ஜாம்பவான் ஜியான்லுஜி பஃப்போனின் ஓய்வு அறிவிப்பை குறிப்பிட்டு, கைலியன் எம்பாப்பே அவருக்கு பிரியாவிடை அளித்தார்.
இத்தாலி கால்பந்து அணியின் மூத்த வீரரான ஜியான்லுஜி பஃப்போன் (Gianluigi Buffon) 45வது வயதில் தனது ஓய்வை அறிவித்தார்.
தேசிய அணிக்காக 176 போட்டிகளில் விளையாடியுள்ள பஃப்போன், 754 கிளப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பர்மா கால்சியோ (Parma Calcio) அணியில் அறிமுகமான பஃப்போன், மொத்தம் 213 போட்டிகளில் அந்த அணிக்காக பங்கேற்றுள்ளார்.
2006ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இத்தாலி அணியில் கோல் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட பஃப்போன், Serie A சாம்பியன்ஷிப் வென்ற ஜூவான்டஸ் கிளப் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
அதிக வயதில் விளையாடிய உலகின் இரண்டாவது கால்பந்து வீரர் பஃப்போன் ஆவார் (ஜப்பான் வீரர் மியூரா கசுயோஷி 56 வயது முதல் வீரர்).
இந்நிலையில், பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் (2018-2019) தன்னுடன் விளையாடிய சக வீரரான பஃப்போனை பிரான்ஸ் நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே வெகுவாக பாராட்டி பிரியாவிடை அளித்தார்.
எம்பாப்பே பஃப்போன் உடனான சிறந்த தருணங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள எம்பாப்பே வெளியிட்டுள்ள பதிவில்,
'உங்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றதும், உங்கள் புகழ்பெற்ற வாழ்க்கைப் பாதையில் செல்வதும் எனக்கு கிடைத்த பாரிய கௌரவம்.
அற்புதமான மனிதரான நீங்கள் வழங்கிய மதிப்புமிக்க ஆலோசனைகளை என் வாழ்நாள் முழுவதும் வைத்திருப்பேன்.
நல்ல பாதையை காட்டியதற்கு நன்றி' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.