காங்., வங்கி கணக்கு முடக்கப்பட்டு விடுவிப்பு
17 மாசி 2024 சனி 17:27 | பார்வைகள் : 1925
கடந்த 2018 - 19ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை, வருமான வரித்துறை நேற்று அதிரடியாக முடக்கியது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற நடவடிக்கையால், அன்றாடச் செலவுகளுக்கே பணமில்லாத நிலை உருவாகி உள்ளதாக அக்கட்சித் தலைவர்கள் கதறினர். வருமான வரி முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகி முறையிட்ட பின், நிபந்தனையுடன் வங்கி கணக்கை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. வரும் 21ல் இது தொடர்பான விசாரணை நடக்க உள்ளது.
தேர்தல் பத்திர விற்பனை திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பை அளித்தது. இதற்கு மறுநாளான நேற்று, காங்கிரஸ்கட்சிக்கு பேரதிர்ச்சிகாத்திருந்தது.
அக்கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும்முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாகன் நேற்று செய்தியாளர்களி டம்கூறியதாவது:
கட்சி கணக்கில் இருந்து நாங்கள் அளிக்கும் காசோலைகள் திரும்பி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரித்த போது, காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரசின் நான்கு முக்கிய வங்கி கணக்குகள், வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது.
கடந்த 2018 -- 19 தேர்தல் நடந்த ஆண்டு என்பதால், அந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்தோம். இதற்காக, 210 கோடி ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கட்சிஎம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் தங்கள் சம்பளத் தொகையில் இருந்து, 14.4 லட்சம் ரூபாயைகட்சிக்கு ரொக்கமாக நன்கொடை அளித்தனர். இதில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, எங்கள் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம், பணியாளர்களுக்கான சம்பளம் செலுத்தக்கூட கட்சியில் பணம் இல்லை.
மக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை பணத்தை வைத்துள்ள வங்கி கணக்கை கூட எங்களால் பயன்படுத்த முடியவில்லை.
ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மட்டுமின்றி, கட்சி நடவடிக்கைகளுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகினர்.
காங்.,கைச் சேர்ந்த விவேக் தன்கா, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகி மனு அளித்தார். அதை பரிசீலித்த தீர்ப்பாயம், முடக்கப்பட்ட காங்., வங்கி கணக்குகளை தற்காலிகமாக விடுவித்தது.
வரும் 21ல், இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் என்றும், அதுவரை வங்கி கணக்கில் 115 கோடி ரூபாய் இருப்பு இருக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் உள்ள பணத்தை செலவு செய்து கொள்ள அனுமதி அளிப்பதாக தெரிவித்தது.
ஆனால், வங்கி கணக்கில் 115 கோடி ரூபாய் அளவுக்கு பணம் இல்லை என காங்., தரப்பு தெரிவிக்கிறது.
இது குறித்து, காங்., - எம்.பி., ராகுல் கூறியதாவது:
பண பலத்தைக் காட்டிலும், மக்கள் பலத்தைக் கொண்டது தான் காங்கிரஸ். சர்வாதிகார நடவடிக்கைக்கு முன், நாங்கள் எப்போதும் தலை வணங்கியதில்லை; இனிமேலும் தலை வணங்க மாட்டோம்.
ஜனநாயகத்தை காப்பாற்ற, காங்கிரசின் ஒவ்வொரு தொண்டனும் போராடப்போவது நிச்சயம்.இவ்வாறு அவர் கூறினார்.
பொய் பேசுவதை நிறுத்துங்கள்!
காங்கிரஸ் கட்சியினர் வருமான வரித்துறையின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. இதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைத் தான் வருமான வரித்துறை தற்போது எடுத்துள்ளது. இதில், பா.ஜ., தலையீடு எதுவும் இல்லை. பிரச்னையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சியினர் அவதுாறுகளையும், பொய்களையும் அள்ளி விடுவது கண்டனத்துக்குரியது. ரவிசங்கர் பிரசாத் முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:அதிகார போதையில் திளைக்கும் அரசு, காங்கிரசின் வங்கி கணக்கை முடக்குகிறது. இது, ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதல். சட்டத்திற்கு புறம்பான வழியில் வசூலிக்கப்பட்ட நிதியை, பா.ஜ., தேர்தலுக்கு செலவழிக்கிறது. அதே நேரம், 'கிரவுட் பண்டிங்' வாயிலாக மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட எங்கள் பணம் முடக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.