அண்ணன் அரசுக்கு எதிராக போராட்டம்: ஷர்மிளாவை கைது செய்த போலீசார்: ஆந்திராவில் பரபரப்பு
22 மாசி 2024 வியாழன் 13:07 | பார்வைகள் : 1712
ஆந்திரா தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை விஜயவாடாவில் போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, ஆந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டார்.
முற்றுகைப் போராட்டம்
இந்நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தை ஷர்மிளா அறிவித்தார். அதன்படி, ஆந்திரா தலைமை செயலகத்தை நோக்கி இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, ஒய்.எஸ்.ஷர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை விஜயவாடாவில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஷர்மிளாவின் போராட்டத்தைத் தடுக்க அவரை வீட்டுக் காவலில் வைக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முயற்சி செய்தது. ஷர்மிளாவின் வீட்டுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் நேற்று ஷர்மிளா வீட்டுக்கே போகவில்லை. காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தூங்கினார். இந்த வீடியோ காட்சிகள் இன்று காலை இணையதளத்தில் வைரலானது.