Paristamil Navigation Paristamil advert login

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த விஜய் திட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த விஜய் திட்டம்

23 மாசி 2024 வெள்ளி 15:00 | பார்வைகள் : 1756


நடிகர் விஜய் கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்துள்ள நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிவித்தார். இந்த மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார். இடைப்பட்ட இந்த 2 வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் பணிகளை இப்போதே முழுவீச்சில் விஜய் தொடங்கியுள்ளார். சமீபத்தில் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு ஆலோசனைகளும் முடிவுகளும் எடுக்கப்பட்டன. குறிப்பாக 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் என கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்களை கவரும் வகையில் கட்சி கொள்கைகள் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்