ரூ.9,482 கோடி வருவாய்: தெற்கு ரயில்வே தகவல்
27 தை 2024 சனி 01:00 | பார்வைகள் : 1707
நடப்பு நிதியாண்டில், இதுவரை 9,482 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மைதானத்தில், நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தேசியக்கொடி ஏற்றினார்.
பின், அவர் பேசியதாவது:
தெற்கு ரயில்வே நடப்பு நிதியாண்டில், 9,482 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 5 சதவீதம் அதிகம். இதுவரையில், 32.24 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளோம். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எழும்பூர், காட்பாடி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட, 13 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்தில் உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 93 ரயில் நிலையங்களில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகளில், முதல்கட்டம் மார்ச் மாதத்தில் முடியும்.
நாகர்கோவில் டவுன் முதல் கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில், திருநெல்வேலி - மேலப்பாளையம் ஆகிய வழித்தடங்களில் நடக்கும் ரயில் பாதை பணிகள், வரும் பிப்ரவரியில் முடிவடையும்.
அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 12 வழித்தடங்களில் மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.<br><br>இவ்வாறு அவர் பேசினார்.