அரசியல் கோழைகள் இருக்கும் வரை ஜனநாயகம் எப்படி தப்பி பிழைக்கும்? நிதிஷ் குமாரை சாடிய கார்கே
30 தை 2024 செவ்வாய் 01:45 | பார்வைகள் : 1416
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவர் மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக நேற்று முன்தினம் (ஞாயிற்று கிழமை) மாலை பொறுப்பேற்று கொண்டார்.
தொடர்ந்து, சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர். 6 பேர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர். இந்த நிலையில், ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த தொண்டர்கள் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, அவர்கள் (அமலாக்க துறையினர்) பயமுறுத்துவதற்காக, அச்சுறுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் நோட்டீசை வழங்குகிறார்கள். பயத்தினால், சிலர் அவர்களுடைய நட்புறவை விட்டு விடுகின்றனர். சிலர் கட்சியையும், சிலர் கூட்டணியையும் விட்டு விடுகின்றனர்.
அதுபோன்ற கோழை மக்கள் தொடர்ந்து இருக்கும் வரை, இந்த நாடு தப்பி பிழைக்குமா? இந்த அரசியல் சாசனம் தப்பி பிழைக்குமா? ஜனநாயகம் தப்பி பிழைக்குமா? அதனால், உங்களுக்கான வாக்கை நீங்கள் செலுத்துவதற்கான இறுதி வாய்ப்பு உங்களிடம் உள்ளது. இதன்பின்னர், வாக்களிப்பதே இருக்காது என்று கார்கே கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல், ஜனநாயகம் பாதுகாக்கப்பட, மக்களுக்கான கடைசி சந்தர்ப்பம் ஆக இருக்கும் என்று அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்த ஆண்டுக்கான மக்களவை தேர்தலுக்கு பின்னர், மோடி வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்து விட்டால், அதன்பின்னர் சர்வாதிகாரம் அறிவிக்கப்படும். ஜனநாயகமோ, தேர்தலோ இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.