ராஜ்யசபா சீட் உரிமை கேட்பது கடமை: அ.தி.மு.க.,விடம் பிரேமலதா கறார்
9 பங்குனி 2024 சனி 03:40 | பார்வைகள் : 2433
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா நேற்று கூறியதாவது:
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் என் வீட்டிற்கு வந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவர்கள் அழைப்பை ஏற்று, தே.மு.தி.க., கூட்டணி பேச்சு குழுவினர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.
இரண்டு கட்ட பேச்சு
கூட்டணி விஷயத்தில் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது, ஒரு வாரத்திற்குள் தெரியும். ராஜ்யசபா எம்.பி., சீட் எங்களது உரிமை; அதை கேட்க வேண்டியது எங்களது கடமை.
தமிழகத்தில் எல்லா கட்சிகளுக்கும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர். எனவே, தே.மு.தி.க.,விற்கும் ராஜ்யசபா சீட் நிச்சயம் வேண்டும். எங்களது உரிமையை அ.தி.மு.க.,விடம் கேட்டுள்ளோம்.
இரண்டு கட்ட பேச்சு நடந்துள்ளது; பொறுத்திருங்கள், நல்ல செய்தி வரும் என அ.தி.மு.க., தரப்பில் கூறி அனுப்பிஉள்ளனர்.
தேர்தல் என்றால் கூட்டணிக்கு அழைப்பது சம்பிரதாயம். பா.ஜ.,வினரும் அழைப்பு விடுத்துள்ளனர். அ.தி.மு.க.,வினர் நேரடியாக வந்ததால் பேசினோம். பா.ஜ.,வுடன் திரைமறைவில் எந்த பேச்சும் நடக்கவில்லை.
தே.மு.தி.க.,விற்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தனித்து போட்டி என நான்கு வாய்ப்புகள் இருந்தன. தி.மு.க., கூட்டணி முடிந்து விட்டது. மற்ற வாய்ப்புகள் உள்ளன. எது கட்சிக்கு நல்லதோ, அந்த முடிவை நிச்சயம் நாங்கள் எடுப்போம்.
தற்புகழ்ச்சி
ஜாபர் சாதிக் என்பவர் 2,000 கோடி ரூபாய் போதைப் பொருட்களை கடத்தியுள்ள செய்தியை பார்க்கும் போது, நாம் தமிழகத்தில் இருக்கிறோமா அல்லது ஆப்ரிக்க நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது.
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். உண்மையிலேயே போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கி, மக்களுக்கு பாதுகாப்பை தர வேண்டும்.
இந்த ஆட்சி சிறப்பானதா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். தன்னைத் தானே பாராட்டிக் கொள்வது தற்புகழ்ச்சி. எனவே, மக்கள் தான் தி.மு.க., ஆட்சி குறித்து பதில் சொல்ல வேண்டும்.<br><br>இவ்வாறு பிரேமலதா கூறினார்.