கொங்கு மண்டலத்தில் பா.ஜ.,தான் வெற்றி பெறும்: அண்ணாமலை
9 பங்குனி 2024 சனி 03:45 | பார்வைகள் : 2888
கோவை உட்பட, கொங்கு மண்டலத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும், பா.ஜ., ஜெயிக்கும் என்பதை எழுதிக் கொடுக்கத் தயார்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.<br><br>கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தேர்தல் நெருங்கும் நிலையில், காஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளதாக குற்றம் சாட்டும் தி.மு.க., 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாகக் கூறி, 33 மாதங்களாகி விட்டது. ஸ்டாலின் உட்பட தி.மு.க.,தலைவர்கள், அதை மறந்து விட்டனர்.
போதைக் கடத்தலில் சிக்கிய ஜாபர் சாதிக், தி.மு.க.,அயலக அணியில் பொறுப்பை வைத்துக் கொண்டு, பல நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
தி.மு.க.,வுக்கு அவருடன் தொடர்பு இல்லை என்றால், அவருடன் எடுத்த போட்டோவை, உதயநிதி ஏன் ட்விட்டரிலிருந்து நீக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தி.மு.க., தப்பிப்பதற்காக, டி.ஜி.பி., பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்கு, கடைசித் தேர்தல். அதனால் ராகுல் எந்த பொய்யையும் சொல்லத் தயாராகவுள்ளார். கடந்த 500 நாட்களில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். காங்., ஆளும் கர்நாடகா, இமாச்சலப் பிரதேசத்தில் அந்த அரசுகள் எதையுமே செய்யவில்லை. சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர் பிரச்னை தீர, இந்தத் தேர்தலில் எங்களுடன் அவர்கள் நிற்க வேண்டும்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான 35 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு இன்னும் தராததால், விரிவாக்கப் பணியை துவக்க முடியவில்லை. இதுபற்றி, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இரு முறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டார். கோவை-கரூர் பசுமை வழிச்சாலைக்கு நிலமெடுத்துத் தராமல், அந்தத் திட்டத்தையும் எதிர்க்கின்றனர்.
பா.ஜ.,வுக்குப் போடும் ஓட்டு, செல்லாத ஓட்டு என்று சொன்ன அ.தி.மு.க.,வினரிடம், 'இந்தத் தேர்தலில் உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்' என்று கேளுங்கள்.
கொங்கு மண்டலத்தின் முதன்மையான கட்சியாக பா.ஜ., வளர்ந்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், அனைத்துத் தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறுமென்று எழுதித்தரத் தயாராகவுள்ளேன்.
பா.ஜ., கட்சிக்குப் போடும் ஓட்டு, வளர்ச்சிக்கான ஓட்டு என்பதை மக்கள் புரிந்துள்ளனர். ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட்ட பல தரப்பினருடனும், தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சரியான நேரத்தில் தமிழகத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
கோவையில் மட்டுமின்றி, பல்வேறு தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டுமென்று கட்சி நிர்வாகிகள் ஆசைப்படுகின்றனர். ஆனால் எனக்கு வேலைப்பளு அதிகம்; சில சங்கடங்களும் இருக்கின்றன. அதனால் தேசிய தலைமை சொல்வதற்கு மட்டுமே நான் கட்டுப்படுவேன்.
தேர்தல் பத்திரம் என்பது, கருப்புப் பணம் கைமாறுவதைத் தடுப்பதற்கான ஒரு வழிமுறை; அதைத் தவிர்க்க முடியாது. இந்தியாவிலேயே தேர்தல் பத்திரம் வாயிலாக, அதிகப் பணம் பெற்றுள்ள மாநிலக் கட்சி தி.மு.க.,தான்.
தமிழகத்தில், பொதுக்கூட்டம் உள்ளிட்ட எல்லாச் செலவுகளுக்கும், 'செக்' மூலமாக பணம் கொடுத்து, வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது பா.ஜ., மட்டுமே.
நான் வெளியிட்ட 2 ஜி ஆடியோவை, ஆ.ராஜா மறுத்தால், நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். நம்முடைய பிரதமரைப் பற்றி, ஆ.ராஜா பேசியதைப் பார்த்து மக்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். பிரதமரைப் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீகத் தகுதியும் இல்லை.
இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.