22 ஆண்டுகள் விளையாடி 700 விக்கெட்! பாரிய சாதனை - ஆண்டர்சனை புகழ்ந்த ஜாம்பவான்
9 பங்குனி 2024 சனி 08:04 | பார்வைகள் : 2018
டெஸ்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சனை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட் மைல்கல்லை எட்டினார்.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் 700 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதனால் ஆண்டர்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில் வெகுவாக பாராட்டியுள்ளார்.
அவர், ''2002ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் தான் முதல் முறையாக ஆண்டர்சன் விளையாடியதைப் பார்த்தேன். அவரது பந்துவீச்சு மீதான கட்டுப்பாடு சிறப்பாக இருந்தது. நாசர் ஹுசைன் அன்று அவரைப் பற்றி உயர்வாகப் பேசினார். இன்றும் கூட அவர் அதை சொல்வார் என்று நான் நம்புகிறேன்.
டெஸ்ட் போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியது பாரிய சாதனை. ஒரு வேகப்பந்து வீச்சாளர் 22 ஆண்டுகள் விளையாடி, 700 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு ஆண்டர்சன் தொடர்ந்து செயல்பட்டது, இன்று நடக்கும் வரை கற்பனையாகவே இருந்திருக்கும். இது அற்புதம்!'' என கூறியுள்ளார்.