Paristamil Navigation Paristamil advert login

வெடுக்குநாறி மலையில் ஏற்பட்ட பதற்றம் : பலர் கைது

வெடுக்குநாறி மலையில் ஏற்பட்ட பதற்றம் : பலர் கைது

9 பங்குனி 2024 சனி 09:37 | பார்வைகள் : 2958


வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (8) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும், பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த  நிலையில், அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பூஜையின்போது கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டதுடன், சப்பாத்துக்கள் அணிந்தபடி ஆலயத்துக்குள் புகுந்த பொலிஸார், வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்துகொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.  

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கி, பொலிஸார் கைது செய்ய முயன்றதுடன், அவர் பாராளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து, அவரை தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டுவிட்டுச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்துக்கு வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிஸாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பதற்ற நிலை காணப்பட்டது.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் சிவராத்திரி வழிபாடுகள் காலை முதல் இடம்பெற்று வந்திருந்தது. 

இதன்போது காலை முதல் வீதி தடைகளைப் போட்டிருந்த பொலிஸார் ஆலய வளாகத்துக்குள் குடிநீர் எடுத்துச் செல்ல இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.

ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர் தாங்கி பொலிஸாரால் 3 கிலோமீற்றருக்கு முன்னுள்ள பகுதியிலேயே தடுத்து வைக்கப்பட்டது. 

இதனையடுத்து குடிநீரின்றி அவதிப்பட்ட சிறுவர்கள், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீர் பெற்றபோதும், அதனையும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், மற்றும் ஆலய பக்தர்கள் குடிநீர் தாங்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்துக்குள் விடுமாறு பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் குடிநீரை விடுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை 3 மணியளவில் குடிநீரை வழங்க பொலிஸார் இணங்கினர்.

அதன் பின்னர், குடிநீருடன் உழவு இயந்திரம் வந்தபோது அந்த வாகனம் காட்டுப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதில்  பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரையும் பொலிஸார் மாலை 6 மணியளவில் குடிநீர் தாங்கியை திறந்து வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்