Paristamil Navigation Paristamil advert login

வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா: மஹூவா மொய்த்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு

வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா: மஹூவா மொய்த்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு

10 பங்குனி 2024 ஞாயிறு 15:20 | பார்வைகள் : 2348


மே.வங்கத்தில் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை திரிணமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதில், பார்லிமென்டில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் யூசுப் பதானும் களமிறங்கி உள்ளார்.

‛இண்டியா' கூட்டணியில் இருந்தாலும் மம்தா, மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தார். காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டது. அதனை மம்தா தரவில்லை.  பிரச்னைக்கு பேசி சுமூக தீர்வு காணப்படும் என காங்கிரஸ் கூறியிருந்தது.

இந்நிலையில், கோல்கட்டாவில் நடந்த பேரணியில் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மம்தா அறிவித்து, ‛ இண்டியா' கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடையாது என்பதை உறுதி செய்துள்ளார். சிட்டிங் எம்.பி.,க்கள் 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 12 பெண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட  மஹூவா மொய்த்ரா கிருஷ்ணா நகர் தொகுதியில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு நடந்த சந்தேஷ்காலி பகுதி அமைந்துள்ள பஷீர்ஹட் தொகுதி எம்.பி., நுஷ்ரத் ஜகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  ஹஜி நூருல் இஸ்லாம் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி., ஆக உள்ளார். அவரே மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பர்தமான்- துர்காபூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்  கீர்த்தி ஆசாத் களமிறக்கப்பட்டு உள்ளார்.

அசன்சோல் தொகுதியில் நடிகர் சத்ருஹன் சின்ஹா போட்டியிட உள்ளார்.

தனித்து போட்டி

இந்த பேரணியில் மம்தா பேசுகையில், மே.வங்கத்திற்கு எதிராக பிரதமர் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு முன்னர், அதிகாரிகளிடம் உண்மையை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன். நீதித்துறையை நான் மதிக்கிறேன். 

ஆனால், சில நீதிபதிகள்  பா.ஜ.,வின் ஏஜன்ட்களாக பணியாற்றுகின்றனர். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். அசாம், மேகாலயாவிலும் களமிறங்குவோம். உ.பி.,யில் போட்டியிடுவது குறித்து அகிலேஷ் யாதவுடன் பேசி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்