ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை
19 பங்குனி 2024 செவ்வாய் 10:17 | பார்வைகள் : 5018
காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர்.
காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார்.
அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையி;னர் இழுத்துச்சென்றனர் அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது.
அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார்.