ஆப்கானிஸ்தான் மீது திடீரென தாக்குதல் ! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
19 பங்குனி 2024 செவ்வாய் 11:40 | பார்வைகள் : 5409
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம் (18-0-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி பாகிஸ்தான் ராணுவம் தனது ராணுவ தளத்தை அமைத்திருந்தது.
நேற்று முன்தினம் (17-03-2024) அதிகாலை இந்த தளத்தின் மீது, திடீரென பயங்கரவாத தாக்குதல் தொடுக்கப்பட்டது.
அதாவது, வெடிபொருள் நிரப்பிய வாகனம் ஒன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது மோதி வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது. இதில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல் 2 வீரர்கள், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
சமீபத்தில்தான் பாகிஸ்தானில் அரசியல் சலசலப்பு ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இப்படி இருக்கையில், திடீரென பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று காலை ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானப்படை அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது.
பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டம் மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள செபரா மாவட்டத்தின் சில பகுதிகள் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன.
இந்த தாக்குதலில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள் என்றும், 3 பேர் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.