இலங்கையில் வேகமாக பரவும் காசநோய்!
24 பங்குனி 2024 ஞாயிறு 07:18 | பார்வைகள் : 2547
இலங்கையில் வேகமாக காசநோய் கரவிவருவதாகவும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மத்திய மார்புநோய்களுக்கான சிகிச்சை பிரிவின் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.எம்.சரத் பண்டார தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
காச நோய் என்பது ஒரு வகை பாக்டீரியா நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.
உமிழ்நீர், சளி மூலமாக பரவக்கூடிய இந்நோய் தற்போது இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது.
இருப்பினும் மேல் மாகாணத்தில் கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி , மோதரை , மாளிகாவத்தை , தெமட்டகொடை , பொரள்ளை மற்றும் வனாத்தமுல்ல உள்ளிட்ட பிரதேசங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நோய் வேகமாக பரவக் கூடியது என்பதால் வீட்டில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டாலும் முழுக் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதிப்பது மிகவும் அவசியம்.
2 வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல் , உணவில் நாட்டமின்மை , உடல் எடை குறைதல் , சளியுடன் இரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் பரிசோதனை மேற்கொண்டு நோயை உறுதி செய்ய வேண்டும்.
வைத்தியரின் ஆலோசனைகளின் கீழ் தொடர்ந்து 6 மாதங்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதால் இந்த நோயை குணப்படுத்த முடியும்.
இந்த நோயானது பாதிப்பு தன்மை அற்றது என்பதுடன் இந்த நோய் அறிகுறிகளை விரைவில் அறிந்து கொண்டால் இதனை குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால் இந்த நோய் அறிகுறிகளை அறிந்து கொள்ள தாமதமானால் இதனை குணப்படுத்துவது சிரமமாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.