தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 30% ஓட்டு வங்கி: எல்முருகன் பேட்டி
29 மாசி 2024 வியாழன் 13:35 | பார்வைகள் : 2912
தமிழகத்தில் இன்றைக்கு பா.ஜ.,வுக்கு 30 சதவீதத்திற்கு மேல் ஓட்டு வங்கி இருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்றாது என சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு அரசாளும் தகுதியுள்ள கட்சியாக வளர்ந்துள்ளது. 'என் மண் என் மக்கள்' யாத்திரை மற்றும் மக்களின் ஆதரவால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதால் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பிரதமர் மோடி பாராட்டினார்.
திமுக.,வை சேர்ந்த இரு ஊழல் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் ஜெயிலில் இருக்கிறார்; இன்னொருவர் ஜெயிலுக்கு செல்ல ரெடியாக இருக்கிறார். இப்போது கிட்டத்தட்ட 11 அமைச்சர்கள் கோர்ட் விசாரணையில் இருக்கின்றனர். இன்றைக்கு தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 30 சதவீதத்திற்கு மேல் ஓட்டு வங்கி இருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட 60 நாட்கள் உள்ளது. இந்த தேர்தல் வரலாற்றை திருப்பி போடும் வகையில் இருக்கும்; வரலாற்றில் தடம் பதிக்கக்கூடிய தேர்தலாக இருக்கும்; அனைவரையும் ஆச்சரியப்படுத்தக்கூடிய தேர்தலாக இருக்கும். திமுக.,வாக இருந்தாலும், வேறு எந்த கட்சியாக இருந்தாலும் பா.ஜ., ஊழலுக்கு எதிரானது தான். இவ்வாறு அவர் கூறினார்.