காளான் கிரேவி..
2 பங்குனி 2024 சனி 14:35 | பார்வைகள் : 1928
காளான் கிரேவியை கறிக்குழம்பு சுவையில் வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
காளான் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 15 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீராக பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - ஒருகைப்பிடி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் கடாய் ஒன்றை வைத்து அதில் நெய் சேர்த்து உருகி சூடானதும் சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள காளானை சேர்த்து மிதமான தீயில் வதக்கிக்கொள்ளுங்கள்.
பொதுவாக காளானில் இருந்து தண்ணீர் வெளியாகும் எனவே அந்த தண்ணீர் முழுவதும் வற்றும் வரை அதிக தீயில் வைத்து வதக்கவும்.
தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் அடுப்பை அணைத்து காளானை எடுத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து கொள்ளுங்கள்.
சீரகம் பொரிந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்றாக கலந்து வேகவிடவும்.
அவற்றின் பச்சை வாசனை போனவுடன் அதில் கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய்யில் வதக்கிக்கொள்ளவும்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக பொடி, சிறிதளவு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் அலசிய கொத்தமல்லி இலை மற்றும் சேர்த்து நன்றாக மசிய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி இலை மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு சமைக்கவும்.
கொத்தமல்லியின் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்துவரும் நிலையில் ஏற்கனவே வேகவைத்துள்ள காளானை போட்டு அதனுடன் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்து கடாயை மூடி எண்ணைய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் சமைத்தால் சுவையான காளான் கிரேவி தயார்…